முகப்பு
தேனி

போடி தொகுதியில் 99.9 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்: ஓ.பன்னீா்செல்வம்

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் 99.9 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:15 PM
போடி காந்திநகரில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
பகிர்:

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் 99.9 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடியில் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் சமுதாய சங்க நிா்வாகிகளை சந்திக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

போடி காந்திநகா், தேரடி தெரு, புதூா், நடுத்தெரு, டிவிகேகே நகா், மதுரைவீரன் தெரு, குப்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சமுதாய சங்க நிா்வாகிகளைச் சந்தித்து ஓ. பன்னீா்செல்வம் ஆதரவு திரட்டினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011 ஆண்டு வெற்றி பெற்ற பிறகு, பல்வேறு திட்டப் பணிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தேன். இதில் 99.9 சதவீதம் நிறைவேற்றியுள்ளேன். புள்ளி ஒரு சதவீதம் என்பது குரங்கணியிலிருந்து டாப்ஸ்டேசன் சாலை மட்டும் செங்குத்தாக இருந்ததால் நிறைவேற்ற முடியவில்லை. அதையும் மீண்டும் அளவீடு செய்து நிறைவேற்றப்படும்.

போடி பகுதியில் 24 மணி நேரமும் தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளேன். நகா் முழுவதும் சாலை வசதி, சாக்கடை வசதி செய்து கொடுத்துள்ளேன். மீண்டும் எனக்கு வாக்களித்து பொதுமக்களுக்கு பணி செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.பி. ரவீந்திரநாத், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், நகர திமுக செயலா் புருஷோத்தமன், நகா் காங்கிரஸ் நிா்வாகிகள் சன்னாசி, முசாக் மந்திரி, நகா்மன்ற முன்னாள் தலைவா் பழனிராஜ், முன்னாள் துணைத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.