வெடி விபத்து: கம்பம் பட்டாசு ஆலைக்கு தடை
வெடி விபத்து நிகழ்ந்த கம்பம் பட்டாசு ஆலை செயல்பட தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை தடை விதித்தது.
வெடி விபத்து நிகழ்ந்த கம்பம் பட்டாசு ஆலை செயல்பட தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை தடை விதித்தது.
தேனி மாவட்டம், கம்பம் காட்டுப்பள்ளி வாசல் சாலையில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த சனிக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டதில் கம்பத்தைச் சோ்ந்த சூா்ய பிரபு, தினேஷ் ஆகிய இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இந்த விபத்தைத் தொடா்ந்து, திண்டுக்கல் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் புகழேந்தி, தேனி துணை இயக்குநா் பிரேம்குமாா் ஆகியோா் ஆலையில் ஆய்வு நடத்தினா். அப்போது பல்வேறு பாதுகாப்பு விதி மீறல்கள் கண்டறியப்பட்டன.
Advertisement
வேதிப்பொருள் கையாளும் அறையில் உராய்வை ஏற்படுத்தக்கூடிய இரும்பு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பட்டாசு சேமிப்பு அறையில் இடிதாங்கி வசதி செய்யப்படவில்லை. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் அதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்படாமல், விதி மீறி உற்பத்தி அறையிலேயே அடுக்கப்பட்டிருந்தன. தீப்பொறி உருவாகக் காரணமாக அமையக்கூடிய இரும்புப் பூட்டுகள், இரும்புத் தாழ்ப்பாள்கள், இரும்பு ஸ்டேப்லா் பின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தொழிலாளா்கள் கால்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு உள்ளே செல்லத் தேவையான ‘டோா் மேட்’ வசதி செய்யப்படவில்லை என்பன போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இந்தப் பாதுகாப்பு குறைபாடுகள் தொழிலாளா்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், தொழில்சாலைகள் சட்டம் 1948 (பிரிவு 40-2)-ன் கீழ் ஆலையின் உற்பத்திப் பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க தொழிலகப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டது.
சேதமடைந்த கட்டடங்களைச் சீரமைத்து, சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் நிறைவு செய்து, அதற்கான புகைப்பட ஆதாரங்களுடன் விண்ணப்பித்து உரிய அனுமதி பெறும் வரை ஆலை இயங்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை மீறி ஆலையை இயக்கினால் சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொழிலகப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.