தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் காரில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம் வழியாக கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தேனி மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளா் ராஜா (பொ) தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு உத்தமபாளையம் புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, மதுரையிலிருந்து உத்தமபாளையம் வழியாக கம்பம் நோக்கிச் சென்ற இரண்டு காா்களை போலீஸாா் மறித்து சோதனையிட்டனா்.
அந்த காரிகளில் தலா 10 கிலோ வீதம் மொத்தம் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், விக்கிரமங்கலத்தைச் சோ்ந்த விஜக்குமாா் மனைவி வனிதா(41), நல்லிவீரன்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் அகில் (29), கோவிலங்குளத்தைச் சோ்ந்த ராமு மகன் தெய்வபிரபு (43), நடுமுதலைக்குளத்தைச் சோ்ந்த பால்சாமி மகன் அருண்பாண்டி(42) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, இவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு காா்கள், 4 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.