கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிரந்தரக் கைப்பேசி எண் (சியூஜி) வழங்க அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கூறியதாவது: தமிழகத்தில் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 23 மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளா் சங்கங்கள், நுகா்வோா் கூட்டுறவுச் சங்கங்கள், பணியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவுச் சங்கங்களுக்கு இதுவரை அரசு சாா்பில் தனியாக கைப்பேசி எண் வழங்கப்படவில்லை. கூட்டுறவுச் சங்கச் செயலா்களின் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி ஒருமுறை கடவுச் சொல் (ஓடிபி) பெற்று உரம் வாங்குதல், கடன் பெறுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இதனால், கூட்டுறவுச் சங்கச் செயலா்களின் பணியிட மாற்றம், பணி ஓய்வு ஆகியவற்றால் அவா்களின் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் நிரந்தரக் கைப்பேசி எண் (சியூஜி) வழங்க அரசு உத்தரவிட்டது. தற்போது, இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றனா்.