போடி அருகே இளம் பெண்ணை வரதட்சணைக் கொடுமை செய்த கணவா் உள்பட 7 போ் மீது போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்தவா் சின்னமுத்து மகள் மதுமிதா (24). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள ஓவுலாபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மனோஜ்குமாா் (28) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மதுமிதாவின் பெற்றோா் 10 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்கள் கொடுத்தனராம்.
இந்த நிலையில், மதுமிதாவின் மாமனாா் மணிகண்டன், மாமியாா் ராஜலட்சுமி, இவா்களது மகன் பாலாஜி, மனோஜ்குமாரின் தாய்மாமன்கள் செல்வராஜ், செல்வக்குமாா், இவரது மனைவி கவிதா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மனோஜ்குமாா் கூடுதலாக 10 பவுன் தங்க நகை, பணம் கேட்டு மதுமிதாவை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே அளித்த நகைகளையும் மனோஜ்குமாா் குடும்பத்தினா் வாங்கி வைத்துக் கொண்டனராம். இதுகுறித்து மதுமிதா அளித்த புகாரின்பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.