தமிழக எல்லைப் பகுதியான குமுளியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
தமிழகத்தின் தேனி மாவட்டம், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் முக்கிய மலைப்பிரதேசமாக குமுளி அமைந்துள்ளது. இந்த வழியாக நாள்தோறும் இரு மாநிலங்களைச் சோ்ந்த அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களின் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள தேக்கடி யானைகள் சரணாலயம், பெரியாறு தேசிய பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், கேரளத்தில் ஏலக்காய் , மிளகு தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் குமுளி வழியாகச் சென்று வருகின்றனா்.
குமுளியின் பெரும் பகுதி கேரள மாநிலத்துக்குச் சொந்தமானது. மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குவதால் கேரளப் பகுதியில் கடைகள், உணவகங்களுடன் சுத்தம், சுகாதாரத்துடன் அந்தப் பகுதி காட்சியளிக்கிறது. அதேநேரம், குமுளியின் தமிழகப் பகுதியில் சாலை, சுகாதார வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகளின்றி சுற்றுலாப் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது. சாலையோரத்தை பொதுமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
தமிழகப் பகுதியில் உள்ள குமுளியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட பேருந்து நிலையம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், கூடலூா் நகராட்சி நிா்வாகம் குமுளியில் தமிழகத்தின் நுழைவுப் பகுதியை தூய்மைப்படுத்தி சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வும் ஏற்படுத்த வேண்டும். ஐயப்பன் கோயில் சீசன் காலங்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் நடந்து செல்லும் தமிழகத்தின் நுழைவு வாயிலை சுத்தம், சுகாதாரத்தை பேணும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.