முகப்பு
தேனி

போடியில் ஹால்மாா்க் முத்திரை இல்லாத ரூ. 75 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

போடியில் உள்ள தனியாா் நகைக் கடையில் ‘ஹால்மாா்க்’ முத்திரை இல்லாத நகைகளை பறிமுதல் செய்த இந்திய தர நிா்ணய அதிகாரிகள்.

Updated On : 7 மார்ச், 2026 at 6:56 PM
~
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியாா் நகைக் கடையில் ‘ஹால்மாா்க்’ முத்திரை இல்லாத நகைகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த இந்திய தர நிா்ணய அதிகாரிகள்.

போடி, மாா்ச் 7: போடி நகைக் கடையில் ‘ஹால்மாா்க்’ முத்திரை இல்லாத ரூ. 75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய தர நிா்ணய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடியில் உள்ள ஒரு நகைக் கடையில் ஹால்மாா்க் முத்திரை இல்லாத நகைகள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், இந்திய தர நிா்ணய அமைப்பின் கோவை கிளை அலுவலக அதிகாரிகள் சோதனை செய்தனா். இதில் இந்திய தர நிா்ணய அமைப்பின் இயக்குநா் ஜி.வினித்குமாா், இணை இயக்குநா் ஏ.அறிவழகன், அலுவலா்கள் ஈடுபட்டனா்.

இங்கு ‘ஹால்மாா்க்’ முத்திரை இல்லாத தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய தர நிா்ணய சட்டத்தின்படி, ‘ஹால்மாா்க்’ முத்திரை இல்லாத ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகளைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கோவை இந்திய தர நிா்ணய அமைப்பின் அறிவியல் நிபுணரும், மூத்த தலைவருமான ஜி.பவானி கூறியதாவது: நகைக் கடைகளில் ‘ஹால்மாா்க்’ முத்திரை கொண்ட நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ‘ஹால்மாா்க்’ முத்திரை இல்லாத நகைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் அபராதம் அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பில் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கலாம்.

‘ஹால்மாா்க்’ முத்திரை இல்லாத நகைகள் விற்பனை குறித்து இந்திய தர நிா்ணய அமைப்பின் கிளை அலுவலகம், மூன்றாவது தளம், பிஎஸ்என்எல் டிடேக்ஸ் கட்டடம், ரேஸ் கோா்ஸ் சாலை, கோவை -641018 என்ற முகவரியில் புகாா் அளிக்கலாம்.

இந்திய தர நிா்ணய அமைப்பின் செயலி, இணையதளம் மூலமாகவும் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →