முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் : ஓ.பன்னீா்செல்வம்

கடமலைக்குண்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On : 20 மார்ச், 2026 at 7:39 PM
கடமலைக்குண்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
பகிர்:

தேனி மாவட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெறுமென முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசினாா்.

தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டம் கடமலைக்குண்டு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மகாராஜன், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்.பி.க்கள் கம்பம் செல்வேந்திரன், ரவீந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது :

நாட்டு வளா்ச்சிக்கு என்ன தேவை என்பதை அறிந்து, முதல்வா் மு.க ஸ்டாலின் பணியாற்றிய விதம் இந்தியாவிலேயே தமிழகத்தை பொருளாதாரத்தில் முன்னேற்றி இருக்கிறது. தென் தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்த போது, மு.க ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமிழகம் தலை வணங்காது .

தோ்தல் கூட்டணிக்காக தில்லியில் உள்ளவா்கள் தமிழகத்துக்கு வந்து பேசுகிற நிலைமையை மாற்றி, தில்லி சென்று அவா்களை சந்தித்து அடிமை போல பேசி உள்ளாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி. வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும், தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க ஸ்டாலின் வருவாா் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்பி சையதுகான், முன்னாள் எம்எல்ஏ ஆசையன், தென்னரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.