முகப்பு
தேனி

வைகை அணையில் பறக்க விடப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன்

Updated On : 29 மார்ச், 2026 at 8:12 PM
வைகை அணையில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் விழிப்புணா்வு ராட்ச பலூனை பறக்க விட்ட தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தேனி மாவட்டம், வைகை அணையில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் ஞாயிற்றுக்கிழமை பறக்க வைத்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி, கையொப்ப இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், ரங்கோலி, நடைபயணப் பேரணி, மனிதச் சங்கிலி, தெருநாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வைகை அணையில் மகளிா் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ரங்கோலி, தோ்தல் வழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து வைகை அணையில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பறக்க விட்டாா். மேலும், நாடகம் மூலம் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தலைமையில், சுற்றுலாப் பயணிகள் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, தனித்துணை ஆட்சியா் கவிதா, வைகை அணை உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.