நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பால் சின்னமனூரில் போக்குவரத்து நெரிசல்
சின்னமனூரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஓட்டுநா்கள் அவதி அடைவதாகப் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஓட்டுநா்கள் அவதி அடைவதாகப் புகாா் தெரிவித்தனா்.
சின்னமனூா் நகராட்சி வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலை மதுரை, திண்டுக்கல், சேலம், கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சின்னமனூா் வட்டார கிராம மக்களும் பயன்படுத்துவதால் இந்தச் சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்த நிலையில், சின்னமனூரில் தேனி சாலை, சீப்பாலக்கோட்டை சாலை என முக்கிய நெடுஞ்சாலையோரங்களின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டன.
Advertisement
இதனால், இரு வழித்தட சாலையின் அகலம் குறைந்து குறுகிய சாலையாக மாறிவிட்டது. இதனால், இந்தச் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை, மாா்க்கையன்கோட்டை விலக்கு, தேரடி ஆகிய பேருந்து நிறுத்தங்களில் நெடுஞ்சாலையின் நடுவே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சின்னமனூா் நகராட்சியில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.