பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்: அமைச்சர்
பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என, பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என, பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
இது குறித்து அவர் சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
ஆண்டுதோறும் பட்டாசுத் தொழில் ஒவ்வொரு பிரச்னையை சந்தித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்தத் தொழிலும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
பட்டாசு தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், கருத்துக்கூற இயலாது. எனினும், சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
பட்டாசுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தினால், தற்போது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசுத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். தேவை ஏற்பட்டால், பட்டாசு ஆலை உரிமையாளர்களை தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.
தமிழக அரசு எப்போதும் பட்டாசுத் தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்றார் அமைச்சர்.
சிவகாசி நகர் காவல்
நிலையத்துக்கு ரூ. 86 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம்:
சிவகாசி நகர் காவல் நிலையக் கட்டடம் பழமையானதாகும். எனவே, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்களும், காவல் துறையினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று, தமிழக அரசு காவல் நிலைய புதிய கட்டடம் கட்ட ரூ. 86 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்தக் கட்டடத்தில் ஆய்வாளர் அறை, கைதிகள் அறை, ஆயுதங்கள் வைக்கும் அறை, கழிப்பறை வசதி, காவலர்கள் ஓய்வறை, கணினி அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
முன்னதாக, வியாழக்கிழமை அமைச்சர் சிவகாசி நகர் காவல் நிலைய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரை, காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்கள் வரவேற்றனர்.