புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் 144 தடை உத்தரவு
ராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலைச் சுற்றி 200 மீ. அளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலைச் சுற்றி 200 மீ. அளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா, சித்திரை பூக்குழி திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயில் நிர்வாகத்தினருக்கும், திருவிழா கமிட்டியினருக்கும் இடையே இணக்கமற்ற சூழல் நிலவியதால் கடந்த இரு ஆண்டுகளாக பூக்குழி திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதால், பாதுகாப்பு கருதியும், அமைதியை நிலைநாட்டவும் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஏப். 21 வரை கோயிலைச் சுற்றி 200 மீட்டர் அளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
புதுப்பாளையம் பெரியமாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து பேசுவதற்கு, கோயில் நிர்வாக கமிட்டியினரையும், திருவிழா கமிட்டியினரையும் அழைத்தோம். இதில், கோயில் நிர்வாக சமுதாயத்தினர் வரவில்லை. திருவிழா நடத்தும் சமுதாயத்தினர் மட்டுமே வந்தனர். இதனால், ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோயிலுக்குள் சில சமுதாயத்தினர் நுழைந்து போராட்டம் நடத்த முற்பட்டனர். இதனால், பெரிய மாரியம்மன் கோயிலைச் சுற்றி 200 மீ. அளவுக்கு ஏப். 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோயிலுக்குள் பக்தர்கள் வழிபாடு நடத்த தடைஇல்லை என்றார்.
இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.