விருதுநகரில் போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்க கோரிக்கை
விருதுநகரில் பழுது காரணமாக இயங்காத சிக்னல்களால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்
விருதுநகரில் பழுது காரணமாக இயங்காத சிக்னல்களால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றை உடனடியாக சீரமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநரின் முக்கிய சாலைகளாக மதுரை சாலை, அருப்புக்கோட்டை சாலை, சிவகாசி சாலை ஆகியவை உள்ளன. இதில், மதுரை சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் ஆத்துப்பாலம், எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு, காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், வாகன ஓட்டிகள் சிக்னல்களுக்கு தக்கவாறு தங்கள் வாகனங்களை விபத்தில்லாமல் இயக்கி வந்தனர்.
இந்நிலையில், இந்த 3 இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் பழுது காரணமாக இயங்க வில்லை. இதன் காரணமாக வேகமாக வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் பிற திசைகளை கவனிக்காமல் செல்கின்றனர். அப்போது மற்ற வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படுவதுடன், பலர் காயமடைந்து வருகின்றனர். இப்பகுதிகளில் பெரிய விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட இடங்களில் சிக்னல்களை சீரமைத்து போக்குவரத்து போலீஸாரை அங்கு நியமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.