ஆபத்தான சாலையை சீரமைக்க கோரிக்கை
சாத்தூரில் ஆபத்தான நிலையில் உள்ள சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூரில் ஆபத்தான நிலையில் உள்ள சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பிரதான சாலை மற்றும் பை-பாஸ் சாலை உள்ளன. இந்த சாலைகளை சாத்தூர்-வெள்ளகரை சாலை இணைக்கிறது. சாத்தூர் பிரதான சாலை வழியாக கோவில்பட்டி, நாகர்கோவில் செல்லும் வாகனங்களுக்காக வைப்பாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட பாலம் பயன்பட்டது. தற்போது, இந்த பாலம் சேதமடைந்துள்ளதால், கடந்த ஆண்டு பழைய பாலத்தின்அருகே ரூ. 13 கோடி செலவில் புதிய பால கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதனால், சாத்தூரிலிருந்து பிரதான சாலை வழியாக கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், மாற்றுச் சாலையாக வெள்ளகரை சாலை வழியே செல்கின்றன. எனவே, இந்தச் சாலை மிகவும் சேதமடைந்து வருகிறது. மேலும், இந்த சாலையில்உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்அலுவலகம் அருகே சாலையோரத் தடுப்புச் சுவர்இடிந்து, ஒரு பேருந்து மட்டுமே செல்லும் நிலை உள்ளது.
எனவே, ஆபத்தான இந்தச் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் அல்லது அனைத்து வாகனங்களையும் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யவேண்டுமென பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், நகராட்சிக்குச் சொந்தமான இந்த வெள்ளகரை சாலையை மாற்று சாலையாக பயன்படுத்துவதற்கு நெடுஞ்சாலைத் துறையினர், நகராட்சி நிர்வாகத்தில் முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்கள் செல்வதால், குடிநீர் குழாய்களும் அடிக்கடி சேதமடைகின்றன. மேலும், சாலை மோசமான நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.