விருதுநகர்

சாத்தூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

DIN

சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் தொடரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் வெம்பகோட்டை பகுதிகளில் ஓடும் வைப்பாற்றில், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெம்பகோட்டை வைப்பாற்றில் கோட்டைபட்டி உள்ளிட்ட பகுதியில் நடைபெறும் மணல் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஆற்றின் இருகரைப் பகுதிகளிலும் அமைந்துள்ள சுமார் 110 கிணறுகள் தற்போது நீரின்றி வறண்டு விட்டதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 
மேலும், ஆற்றின் குறுக்கே 10 உறை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் கோட்டைபட்டி, ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், இரவு பகலாக நடைபெறும் மணல் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து உறை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் குடிநீர்த் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
மணல் திருட்டை தடுக்க தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறையினரிடம் மனுக்கள் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதேபோன்று, சாத்தூர் வைப்பாற்று பகுதியில் உள்ள படந்தால், கொல்லபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் திருட்டு நடைபெறுகிறது. கடந்த ஓராண்டுக்குள் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வைப்பாறு பகுதியில் சுமார் 30ஆயிரம் யூனிட்டுக்கும் மேல் மணல் திருடப்பட்டுள்ளதாக, சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
மணல் திருட்டால், விவசாயமும், குடிநீர் ஆதாரமும் முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் நிலையில், இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT