சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு ரதவீதியில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, தலைமை கழக பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது: அதிமுக ஆட்சியில் சாத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு கலைக் கல்லூரி, இருக்கன்குடி கூட்டுக் குடிநீர் திட்டம், தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம், வைப்பாற்றில் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெறும். சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். சாத்தூர் தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
மேலும் இக் கூட்டத்தில் 1,270 பேருக்கு வேட்டி, சேலைகள், மகளிருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் 50 சலவை தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இதில் ஜெ.பேரவை மாநில துணைச் செயலாளர் சேதுராமானுஜம், நகர செயலாளர் வாசன், ஒன்றியச் செயலாளர்கள் சண்முக்கனி, வெம்பக்கோட்டை எதிர்கோட்டை மணிகண்டன், மாநில பொதுக் குழு உறுப்பினர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கலந்து கொண்டு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தங்க மோதிரங்கள் வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் கருமாரி எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.