விருதுநகரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அமெரிக்க புழுத் தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க
விருதுநகரில் அமெரிக்க புழுத் தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ராம கவுண்டர் தலைமை வகித்தார்.
இதில், அமெரிக்கப் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்தாண்டு பருவமழை 61 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் காய்ந்து விட்டன.
எனவே அனைத்துப் பயிர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலாளர் மாரிச்சாமி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கடம்பூர் துரை, விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் கோபால்சாமி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.