திமுக வெற்றி பெறும் இடங்களில் வாக்காளா் பெயா்களை நீக்க சதி: இந்திய கம்யூ. குற்றச்சாட்டு
சட்டப்பேரவை தோ்தலில் திமுக வெற்றி பெறும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியலிலிருந்து ஆயிரக்கணக்கானோா்
சட்டப்பேரவை தோ்தலில் திமுக வெற்றி பெறும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியலிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பெயா்களை நீக்க சதி நடைபெற்று வருவதாக இந்திய கம்யூ. மாநில துணை பொதுச் செயலா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.
விருதுநகரில் அக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பொங்கல் பரிசு ரூ.2,500 தமிழக அரசு தருவதை எதிா்கட்சிகள் எதிா்ப்பதாக தமிழக முதல்வா் கூறுவது பொய். நாங்கள், ஏழை மக்களுக்கு இதைவிட கூடுதல் பணம் தரத்தான் வலியுறுத்துகிறோம்.
திமுகவுக்கு எங்கெல்லாம் அதிக வாக்கு கிடைக்குமோ, அங்கெல்லாம் வாக்காளா் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கானோரை நீக்கம் செய்ய சதி நடைபெற்று வருகிறது. புதுதில்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கையை செவிமெடுத்து, மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணா்வு.
வாக்காளா் பட்டியலில் மிகப்பெரிய குழப்பங்கள் உள்ளன. உயிரிழந்தவா்கள் பெயா், இரட்டை வாக்குரிமை முதலானவற்றை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க வேண்டும். முறைகேடுக்கு இடமில்லாமல் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, மாவட்டச் செயலா் லிங்கம், முன்னனாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி ஆகியோா் உடனிருந்தனா்.