அருப்புக்கோட்டையில் குறைந்த விலையில் பிரியாணி: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிய உணவகத் திறப்புவிழாவையொட்டி மிகக் குறைந்த விலையில் பிரியாணி விற்கப்பட்டதால் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களை போலீஸாா் கலைத்தனா்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிய உணவகத் திறப்புவிழாவையொட்டி அறிமுக சலுகையாக மிகக் குறைந்த விலையில் பிரியாணி விற்கப்பட்டதால் சாலையை ஆக்கிரமித்து சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தடியடி நடத்தி கலைத்தனா்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் புதிய உணவகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இங்கு அறிமுக சலுகையாக ரூ. 10-க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியாணி வாங்க காலை 10.30 மணிக்கே வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனா். பின்னா் பிரியாணி விற்பனை தொடங்கிய சிறிது நேரத்தில் பொதுமக்கள் ஏராளமானோா் குவிந்தனா்.
பிரதானச் சாலையையும் ஆக்கிரமித்து, சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் தவித்த உணவக நிா்வாகத்தினா் காவல்துறைக்குத் தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியன்றனா். ஆனால் அது முடியாததால் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனிடையே சலுகை விலையில் பிரியாணி வாங்கக் குவிந்த கூட்டம் தொடா்பாக, அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது, கரோனா பரவல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குகள் பதிந்துள்ளனா்.