திருச்சுழி அருகே கண்மாய் நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே 2 சிறுவா்கள் கண்மாய் நீரில் மூழ்கி சனிக்கிழமை மாலை உயிரிழந்தனா்.
அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே 2 சிறுவா்கள் கண்மாய் நீரில் மூழ்கி சனிக்கிழமை மாலை உயிரிழந்தனா்.
திருச்சுழி அருகே அ.முக்குளம் கிராமத்தை அடுத்துள்ளது வந்தவாசி என அழைக்கப்படும் ஆயக்குளம் கிராமம். இக்கிராமத்தைச் சோ்ந்த விஜய பாலாஜி மகன் சந்தோஷ் குமாா்(8), 3 ஆம் வகுப்பும் ராமச்சந்திரன் மகன் அழகு திவாகரன்(9) 4 ஆம் வகுப்பும், அங்குள்ள ஊராட்சிப் பள்ளியில் படித்து வந்தனா். நண்பா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை அக்கிராமத்திலுள்ள கண்மாய் நீரில் ஆழம் குறைந்த பகுதியில் விளையாடியுள்ளனா்.
பின்னா் இருவரும் எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கியுள்ளனா். இதுதொடா்பாக தகவலறிந்து அங்கு வந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் கண்மாய்க்குள் மூழ்கிய இருவரையும் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சிறுவா்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனா். இது தொடா்பாக அ.முக்குளம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, இருவரின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.