தூர்வாரப்படாத பாளையம்பட்டி மாங்குளம் கண்மாய்
பாளையம்பட்டியில் மாங்குளம் கண்மாயின் பிரதான நீர்வரத்துக் கால்வாயில் வளர்ந்துள்ள புதர்ச்செடிகளை அகற்றித் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் மாங்குளம் கண்மாயின் பிரதான நீர்வரத்துக் கால்வாயில் வளர்ந்துள்ள புதர்ச்செடிகளை அகற்றித் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பாளையம்பட்டி மாங்குளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ஏற்கெனவே விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அக்கண்மாயின் பிரதான நீர்வரத்துக் கால்வாயைப் பல ஆண்டுகளாகத் தூர்வாராததால் புதர்ச்செடிகள் அதிகம் வளர்ந்து மழைநீர்வரத்தைப் பெருமளவில் தடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கெனவே இக்கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் கண்மாய் நீரை நம்பி பாசனம் செய்த விசாயிகள் பலரும், விசாயத்தைக் கைவிட்டுக் கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர். சிலர் மட்டும் அக்கண்மாயை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஆழ்துளைக்கிணறு அமைத்து பூ விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மழைக்காலத்தில் இக்கண்மாய்க்குப் பெருமளவு நீர்வரத்தைத் தரும் பிரதான மழைநீர்க் கால்வாயானது புதர்ச்செடிகள் மண்டி நீர்வரத்தும் தடைப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதனால் பாசனத்திற்காக அதிக நேரம் மின்மோட்டாரை இயக்கவேண்டிய அவல நிலைக்கு விவசாயிகளும், மேலும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் வீட்டுப்புழக்கநீர் பிடிப்பதிலும் பாதிக்கப்ட்டுள்ளனர். ஆகவே நிலத்தடி நீராதாரமாக உள்ள மாங்குளம் கண்மாயின் பிரதான மழைநீர் வரத்துக்கால்வாயை விரைவில் தூர்வார அப்பகுதிவாசிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.