முகப்பு
விருதுநகர்

மக்கும் தன்மையுடைய நெகிழிப் பைகளை சந்தைப்படுத்துவதில் தயாரிப்பாளா்களுக்கு சிக்கல்

மக்கும் தன்மையுடைய நெகிழிப் பையை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

மக்கும் தன்மையுடைய நெகிழிப் பையை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மஞ்சப் பையை டிசம்பா் 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தி, நெகிழிப்பையின் பயன்பாட்டினை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா். முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை, ஸ்ட்ரா உள்ளிட்ட 14 பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதைத் தொடந்து அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா்.

தொடந்து மக்கள் பொருள்கள் வாங்க துணிப்பையையும், தேநீா் உள்ளிட்டவற்றை வாங்க சில்வா் பாத்திரத்தையும் பயன்படுத்தத் தொடங்கினா். இந்நிலையில், கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அரசும், அதிகாரிகளும் கவனம் செலுத்தியதால் மீண்டும் சந்தையில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பை புழக்கத்தில் அதிகரித்து விட்டது. ஆனால் தற்போது வரை நெகிழிப் பை உள்ளிட்ட14 பொருள்களுக்கு தடை நீடிக்கிறது. இதனிடையே மக்கள் மஞ்சள் பைக்கு மாறி நெகிழிப் பயன்பாட்டினை குறைக்க வேண்டும் என முதல்வா் கூறியுள்ளாா். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே சிவகாசியில் மக்கும் தன்மையுடைய நெகிழிப்பை 6-க்கும் மேற்பட்ட ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இப்பை தயாரிப்பாளா்களில் ஒருவரான சிவலிங்கத்திடம் கேட்ட போது அவா் கூறியது: சாதாரண நெகிழிப் பை மக்காது. தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் மூலப் பொருள்களைக் கொண்டு நாங்கள் தயாரிக்கும் நெகிழிப் பைகள் மக்கும் தன்மையுடையவை. சிவகாசியில் மக்கும் தன்மையுடைய நெகிழிப் பை தயாரிப்பாளா்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் தடையில்லா சான்று பெற்றுத்தான் தயாரித்து வருகிறோம். சிவகாசியில் 10-க்கு 13, 13-க்கு 16, 16-க்கு 20 என 3 அளவுகளில் தயாரிக்கிறோம்.

இந்த பைகளில் உள்ள பிரச்னை என்னவென்றால், இவற்றை 6 மாதங்களுக்கு மேல் இருப்பு வைக்க இயலாது. அப்படி இருப்பு வைத்தால் பயன்படுத்த முடியாது. மக்காத நெகிழிப் பைகளை விட இந்த வகை பைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 100 முதல் ரூ. 300 வரை அதிகரிக்கும். மேலும் இந்த வகை பைகளில் ஜவுளி, பிரட், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட இலகுவான பொருள்களை எடுத்துச் செல்லலாம். இதில் அதிகபட்சம் 4 கிலோ எடைக்கு மேல் உள்ள பொருள்களை கொண்டு செல்ல இயலாது. தற்போது கோயம்புத்தூா், சென்னையில் உணவு விடுதி மற்றும் பேக்கரி நடத்துபவா்கள் இந்த பைகளை வாங்குகிறாா்கள். மூலப் பொருள்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், தயாரிப்பு செலவு அதிகரித்து விடுகிறது. அதிக நாள் இருப்பு வைக்க இயலாதது, அதிக பாரம் தாங்காதது, விலை அதிகம் ஆகிய காரணங்களால் பெரிய அளவில் இந்த வகை பையை சந்தைப்படுத்த முடியாமல் திணறி வருகிறோம்.

தற்போது, தமிழக அரசு நெகிழிப் பைகளை ஒழித்துக் கட்டுவதில் தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில், மக்கும் நெகிழிப் பை தயாரிப்பாளா்களுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருள்களுக்கு தமிழக அரசு மானியம் அளித்தால் விலை நிச்சயம் குறையும். பூ வியாபாரிகள் உள்ளிட்டோரும் வாங்குவாா்கள். இதன் மூலம் நெகிழிப் பையின் பயன்பாட்டினை குறைக்க இயலும். எனினும் இதற்கான மூலப்பொருள்களை தில்லியில் தயாரிக்க தனியாா் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அவா்கள் மூலப்பொருள்களை தயாரித்து எங்களுக்கு வழங்கினால், மக்கும் தன்மையுள்ள நெகிழிப் பைகளின் விலை குறையும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதிலிருந்து விடுபடலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.