அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகளைப் பதுக்கிய 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீர சோழன் அருகே மினாக்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக 4 பழமையான ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீர சோழன் அருகே மினாக்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக 4 பழமையான ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் பல இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே கமுதி - திருச்சுழி சாலை அபிராமம் சந்திப்பில் வீரசோழன் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக திருச்சுழி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவலர்களைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள் அவர்களிடம் சோதனை நடத்தியதில் உலோகத்திலான சிறிய அம்மன் சிலை ஒன்று இருந்தது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் சிலையோடு நரிக்குடி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் பழனிசாமி மற்றும் கூறிப்பாண்டி என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன் சிலை எனவும் இதே போல் மேலும் 3 சிலைகள் தங்களது கூட்டாளியான மினாக்குளத்தை சேர்ந்த பூசாரி சின்னையா என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நரிக்குடி காவல்துறையினர் மினாக்குளம் சென்று சின்னையாவின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, விநாயகர் சிலை மற்றும் பெரிய அம்மன் சிலை என மேலும் மூன்று சிலைகளை மீட்டனர்.
சட்டவிரோதமாக சிலைகளைப் பதுக்கியதாக சின்னையா மற்றும் பழனி முருகன் என்ற மேலும் இருவரை காவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைப்பற்ற சிலைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள் எனவும் தற்போது ஊரடங்கு காரணமாக செலவிற்கு பணமில்லாததால் ஏதேனும் நகைப்பட்டறையில் சிலையை விற்க முடியுமா என திருச்சுழிக்குக் கொண்டு செல்ல முயன்றதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்து ஏதேனும் கோயிலில் சிலைகளை திருடினார்களா இல்லை வெளிநாடுகளுக்கு விற்பதற்காகக் கடத்திக் கொண்டுவரப்பட்ட சிலைகளா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.