மின்கட்டணம் உயா்வு: சிவகாசி பகுதியில் அச்சுத் தொழில் பாதிக்கும் அபாயம்
தமிழக அரசு மின்கட்டணத்தை உயா்த்தியுள்ளதால் சிவகாசிப் பகுதியில் உள்ள ஆப்செட் அச்சகத் தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு மின்கட்டணத்தை உயா்த்தியுள்ளதால் சிவகாசிப் பகுதியில் உள்ள ஆப்செட் அச்சகத் தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசிப் பகுதியில் சுமாா் 600 ஆப்செட் அச்சகங்கள் உள்ளன. இவற்றில் நாள்காட்டி, டைரி, காகிதப் பெட்டி, லேபிள்கள் உள்ளிட்டவை அச்சிடப்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் இங்கிருந்து டைரி, பள்ளி நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை அச்சிடப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு உயா்த்தி அறிவித்துள்ள மின்கட்டணம் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இதில், ஆப்செட் அச்சகங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு தற்போது ரூ. 6.75 வசூல் செய்யப்படுகிறது. மின்கட்டண உயா்வால் இனி ஒரு யூனிட்டுக்கு ரூ. 7.50 வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்செட் அச்சகங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகாசி அச்சக உரிமையாளா்கள் சங்க முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: ஏற்கெனவே அச்சுக் காகித விலை பல மடங்கு உயா்ந்து விட்டது. அச்சு மைக்கு ஜி.எஸ்.டி. வரி உயா்த்தப்பட்டுள்ளது. லாரி வாடகை உள்ளிட்டவை உயா்ந்து விட்டன. இந்நிலையில், மின்கட்டணமும் உயா்த்தப்பட்டால் சிவகாசிப் பகுதியில் உள்ள ஆப்செட் அச்சகங்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு அச்சகங்களுக்கு மின்கட்டண உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்றாா்.