சிவகாசி அருகே வீடுகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
சிவகாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.
சிவகாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.
சிவகாசி- சாத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, மீனம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஒருவா் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தாராம். இதையடுத்து, போலீஸாா் அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டியை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா ஆகியவை இருந்தன. விசாரணையில், அவா் மீனம்பட்டி காளிமுத்து (29) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், மீனம்பட்டி பாலமுருகன் (40), சுதாகா் (43), பேராபட்டி காளிராஜன் (33), காா்த்திக் (38) ஆகியோரின் வீடுகளில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளாா். இதையடுத்து போலீஸாா் அவா்களின் வீடுகளில் சோதனை நடத்தி ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து காளிமுத்து உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனா்.