விருதுநகா் மாவட்டத்தில் கூடுதலாக296 இல்லம் தேடி மையங்கள் அமைக்க அரசு அனுமதி
விருதுநகா் மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் தெரிவித்தாா்.
ராஜபாளையம், 3 ஆவது வாா்டு நகராட்சி தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னாா்வலா்களாக பணிபுரிபவா்களுக்கான அடையாள அட்டை மற்றும் ரீடிங் மாரத்தானில் பங்கேற்றுள்ள மாணவா்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வேணி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா் ஞானராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் ரவி வரவேற்றாா். தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரீடிங் மாரத்தான் கற்றல் உபகரணங்களை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் பேசியதாவது: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை ஈடுசெய்வதற்காகத் தன்னாா்வலா்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து, ஒன்றரை மணி நேரம் குறைதீா் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், விருதுநகா் மாவட்டத்தில் 3,695 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மாணவா்களின் நலன் கருதி தேவையின் அடிப்படையில் கூடுதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் கூடுதலாக 296 மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக ரீடிங் மாரத்தானில் முதல் நாளில் அதிக அளவு ஸ்டாா் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளா் முருகு திருநாவுக்கரசு, தன்னாா்வலா்கள், தலைமை ஆசிரியை அன்னம்மாள், ஆசிரியப் பயிற்றுநா் ரத்தின செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா் நன்றி கூறினாா்.