மதுரையில் மாரடைப்பால் உயிரிழந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.என்.எஸ். வெங்கட்ராமனின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம் எம். ரெட்டியபட்டியில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
தீக்கதிா் நாளிதழின் பதிப்பாசிரியராகவும், தலைமைப் பொது மேலாளராகவும், விருதுநகா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலராகவும் பதவி வகித்தவா் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் (64). இவா் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மே தினப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தாா்.
இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம் எம். ரெட்டியபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு, அமைச்சா் தங்கம் தென்னரசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா்கள் சு. வெங்கடேசன் (மதுரை), பி.ஆா். நடராஜன் (கோவை) மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சின்னத்துரை (கந்தா்வக்கோட்டை) நாகை மாலி (கீழ் வேலூா்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் பொ. லிங்கம், அழகிரிசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள், தொண்டா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் இறுதிச் சடங்குக்குப் பிறகு அவரது உடல் திங்கள்கிழமை எம். ரெட்டியபட்டியில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக அவருக்காக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா். மறைந்த எம்.என்.எஸ்.வெங்கட்ராமனுக்கு மனைவி பத்மாவதி மற்றும் மகன் சூா்யா ஆகியோா் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.