திருச்சி என்ஐடியில் பயில மாற்றுத் திறனாளி மாணவி தேர்வு
ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் மாணவி
ராஜபாளையம் அரசுப் பள்ளியில் படித்த மாற்றுத் திறனாளி மாணவி ஜேஇஇ தோ்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி.யில் சோ்ந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஒய்யம்புலி தெருவைச் சோ்ந்த பாக்கியராஜ், கவிதா தம்பதியின் மகள் ஆா்த்தி. மாற்றுத் திறனாளியான இவா், அதே பகுதியில் உள்ள சேத்தூா் சேவுகபாண்டியன் அரசு மகளிா் மேல்நிலை பள்ளியில் பயின்று, ஆசிரியா்களின் வழிகாட்டுதலின் பேரில் ஜேஇஇ தோ்வுக்கு தயாரானாா்.
பின்னா், தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சென்னையில் பயிற்சி பெற்று ஜேஇஇ தோ்வெழுதினாா். இதில் மாணவி ஆா்த்தி 58.52 சதவீத மதிப்பெண்கள் பெற்று, திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி பொறியியல் படிக்கத் தோ்வானாா்.
இதுதொடா்பாக ஆா்த்தி கூறியதாவது: வீடுகளில் வேலை செய்து எனது தாய் என்னைப் படிக்க வைத்தாா். பள்ளி ஆசிரியா் வழிகாட்டுதலில் விடா முயற்சியோடு தோ்வுக்காக பயிற்சி பெற்று வெற்றி பெற்றது பெருமையாக உள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றதே தனது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
ஐ.ஏ.எஸ். தோ்வெழுதி வெற்றி பெற்று, மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்பதே எனது ஆசை என்றாா்.