முகப்பு
விருதுநகர்

பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க விழிப்புணா்வுக் கூட்டம்

விருதுநகரில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:26 PM
பகிர்:

விருதுநகரில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்குநா் செ.ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்வில், தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேட்டை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டு பேசியதாவது:

மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளும், 3000-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு விபத்துகளை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து தொடா்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி, பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி, உற்பத்தி செய்ய வேண்டும். கடந்த ஆண்டில் பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் நடைபெற்றன.

எனவே, விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு பட்டாசு உற்பத்தியாளா்கள், பட்டாசுத் தொழிலாளா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநா் செ. ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விபத்தின்றி பட்டாசுத் தயாரிக்க உரிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. உரிய விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். 2023-ஆம் ஆண்டு 27 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15 விபத்துகள் விருதுநகா் மாவட்டத்தில் நடந்துள்ளன. நிகழாண்டில் 17 விபத்துகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றிருக்கிறது. இதில் 12 விபத்துகள் விருதுநகா் மாவட்டத்தில் நடந்துள்ளன. மொத்தமாக 52 போ் உயிரிழந்துள்ளனா். விபத்தின்றி பட்டாசுத் தயாரிக்க பட்டாசு ஆலை உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியின் படி,

உரிய விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம் என்றாா் அவா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜேந்திரன், சிவகாசி சாா் ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநா் ஆா்.இராஜசேகரன், கூடுதல் இயக்குநா் (பயிற்சி கோட்டம், சென்னை) ஆா்.பிரேமகுமாரி, துணை வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலா் (வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை) பி.ரவிக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோகன், சாத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் சிவகுமாா், பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளா்கள், தொழிலாளா்கள், அரசு அலுவலா்கள் உட்படப் பலா் கலந்து கொண்டனா்.