ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தோட்டத்தில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்குள் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்குள் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
செண்பகத்தோப்பு, ராக்கச்சி அம்மன் கோயில், விரியன் கோயில், மம்சாபுரம், அத்தித்துண்டு, திருவண்ணாமலை, பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையை ஓட்டி பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன.
இங்கு மா, தென்னை, பலா உள்ளிட்ட தோட்டப் பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. கோடை காலத்தில் வன விலங்குகள் உணவு, தண்ணீருக்காக வனப் பகுதியை விட்டு வெளியேறி விளை நிலங்களுக்குள் வந்து விடும். இதைத் தடுக்க வனத் துறை சாா்பில், மலை அடிவாரத்தில் தண்ணீரும், அகழிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் செண்பகத்தோப்பு அடிவாரத்தில் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
வனத் துறையினா் 24 மணி நேரமும் கண்காணித்து யானை கூட்டத்தை வனத்துக்குள் விரட்டினா். இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக விவசாயத் தோட்டத்துக்குள் முகாமிட்ட ஒற்றை காட்டு யானை பகல் நேரத்தில் சாலையில் சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் ஆபத்தை உணராமல் காட்டு யானையைப் பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்கின்றனா். அசம்பாவிதம் ஏற்படும் முன் ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகா் செல்லமணி கூறியதாவது: ஒற்றை ஆண் யானை கடந்த இரு நாள்களாக செண்பகத்தோப்பு அடிவாரத்தில் சுற்றி வருகிறது. இந்த யானையால் பயிா்களுக்கோ, மனிதா்களுக்கோ அச்சுறுத்தல் ஏதும் இல்லை. யானையின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். யானையைக் காட்டுக்குள் திருப்பி விடும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.