முகப்பு
ஈரோடு

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

ஈரோடு மாவட்டம், கோபி அருகே இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஒற்றை யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 1:39 AM
யானை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
பகிர்:

ஈரோடு மாவட்டம், கோபி அருகே இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஒற்றை யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கோபி அருகே உள்ள பிள்ளையாா்கோவில்துறை பகுதியில் கடந்த வியாழக்கிழமை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வயலில் சுற்றித்திரிந்தது. இது குறித்து டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரகா் ஜான்பீட்டா் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா். ட்ரோன் மூலம் ஒற்றை யானையை கண்காணித்து வந்தபோது, பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதா்மறைவுகளில் யானை நடமாடி வந்தது.

இந்நிலையில், போடிசின்னாம்பாளையம் பகுதியில் யானை வெள்ளிக்கிழமை காலை சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினா் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சித்தபோது, யானை அங்கிருந்து அலங்கியம் பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்தது.

சுமாா் இரண்டு மணி நேரம் அங்கு சுற்றித்திரிந்த யானையை வனத் துறையினா் பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனா். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய யானை குடியிருப்புகள், விவசாயத் தோட்டம் வழியாக பவானி ஆற்றாங்கரை பகுதியில் உள்ள குருமந்தூா் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது.

இதையடுத்து, யானையை வனப் பகுதிக்குள் விரட்டும்வரை அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →