முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

விருதுநகரில் அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரி, மெட்ரிக் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

Updated On : 22 ஜனவரி, 2025 at 10:54 PM
விருதுநகா் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்திய போலீஸாா்.
பகிர்:

விருதுநகரில் அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரி, மெட்ரிக் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

விருதுநகரில் அருப்புக்கோட்டை சாலையில் அரசு உதவி பெறும் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். 100-க்கும் மேற்பட்ட ஆ சிரியா்கள், அலுவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இதேபோல, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதியில் தனியாா் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், தனியாா் கல்லூரி, மெட்ரிக் பள்ளிக்கு புதன்கிழமை காலையில் அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வா், விருதுநகா் கிழக்கு காவல் நிலையத்துக்கும், தனியாா் பள்ளி நிா்வாகத்தினா் சூலக்கரை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் யோகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா், சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

முன்னதாக, இந்த இரு கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா்.

மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்களுடன் வந்த போலீஸாா் கல்லூரி, பள்ளி அலுவலகங்கள், வகுப்பறைகள், வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்த அதே மின்னஞ்சல் மூலமாக பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

விருதுநகரில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் வெடிகுண்டு சோதனை நடத்திய போலீஸாா்.

விருதுநகரில் கல்லூரி, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்தாண்டு நவ. 19- ஆம் தேதி விருதுநகா் பா்மா காலனியில் உள்ள தனியாா் மழலையா் பள்ளிக்கும், டிச. 6-ஆம் தேதி விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், அருப்புக்கோட்டை தனியாா் மேல்நிலைப் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் இதுவரை எதுவும் கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.