ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பெருவாரியான வாக்கு வங்கிகள் இருந்தாலும், நாம் தமிழர் கட்சி தவெக வேட்பாளர்கள் பெறும் வாக்குகளும், நடுநிலையாளர்களின் வாக்குகளுமே வெற்றியைத் தீர்மானிக்கும் சூழல் உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளதால் எப்போதும் பசுமையாகக் காணப்படும். முன்னாள் சென்னை மாகாண முதல்வரும், ஒடிஸா மாநில ஆளுநருமான பி.எஸ். குமாரசாமி ராஜா பிறந்த தொகுதி. விவசாயமும், தொழில் துறையும் இணைந்த வளர்ச்சி பெற்றது இந்தத் தொகுதி நூற்பாலைகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துத் துணிகள் அதிகளவில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக 5 முறையும், திமுக 4 முறையும். இந்திய தேசிய காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
Advertisement
நாடார், தேவேந்திரகுல வேளாளர்கள், முக்குலத்தோர், ராஜுக்கள். சாலியர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் இந்தத் தொகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி 4 ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். இவர் இரண்டு முறை வெற்றி பெற்றார். ஒரு முறை தோல்வி அடைந்தார். திமுக அரசின் நலத் திட்டங்கள், கூட்டணி பலம் இவருக்கு சாதகமான அம்சங்கள். எனினும், இவர் தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இவருக்கு பாதகமான அம்சம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளரான வழக்குரைஞர் ஜா பிரிசில்லா பாண்டியன் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து செல்பவர் பார் கவுன்சிலில் பல பொறுப்புகளை வகித்தவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனின் மனைவி என்பது இவருக்கு சாதகமான அம்சம். ஆனால், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அதிமுக நேரடியாக களமிறங்காததால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு: இந்தத் தொகுதியில் மாங்கூழ் தொழில்சாலை, ஜவுளி பூங்கா, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயில், தேவதானத்தை அடுத்த சாஸ்தா கோயிலை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். அரசு கலைக் கல்லூரி தொடங்கவேண்டும். தரணி சர்க்கரை ஆலை நிலுவைத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். புதை சாக்கடை திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும். சொத்து வரியைக் குறைக்க வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.
4 முனைப் போட்டி: ராஜபாளையம் தொகுதியைப் பொருத்தவரை, திமுக, அதிமுக கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் கார்த்திக்கேயன், தவெகவின் ஜெகதீஸ்வரியும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர்கள் பெறும் வாக்குகளும், நடுநிலையாளர்களின் வாக்குகளே வெற்றியே தீர்மானிக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.