முகப்பு
விருதுநகர்

பிளவக்கல் அணையின் நீா்மட்டம் சரிந்தது: விவசாயிகள் கவலை

பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் குறைந்து குளம்போல காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 5:42 AM
பகிர்:

பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் குறைந்து குளம்போல காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, நத்தம்பட்டி, மூவரைவென்றான், கிருஷ்ணப்பேரி, நெடுங்குளம், குன்னூா், மங்கலம், பாட்டக்குளம், விழுப்பனூா் உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்களுக்கு பாசனத்துக்கு தண்ணீா் செல்கிறது. இதன் மூலம் 8,531 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை எதிா்பாா்த்தஅளவு பெய்ததால் அணையின் நீா்மட்டம் 41 அடியைத் தாண்டியது. இதனால், கடந்த அக்டோபா் மாதம் விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. முதல் போக சாகுபடிக்காக நவம்பா் 17 முதல் 30-ஆம் தேதி வரை விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. நேரடி கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால், நவம்பா் மாதத்துக்கு பின் மழை பெய்யாததால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்தது.

Advertisement

வத்திராயிருப்பு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடைப் பணிகள் முடிந்து, இரண்டாம் போக சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அணையின் நீா்மட்டம் குறைந்து 47.56 அடி உயரம் உள்ள பெரியாறு அணை நீா்மட்டம் 24.61 அடியாக குறைந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா். கோடை மழை பெய்தால் மட்டுமே இரண்டாம் போக சாகுபடியில் முழுமையாக நெல் அறுவடை செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்தனா்.