நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் சாராயம் விற்ற 21 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸாா் கள்ளச் சாராயம், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனா். அதுபோல நாகை மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக போலீஸாா் சாராயம் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனா்.
இந்நிலையில், போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம், கீழையூா், கீழ்வேளூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 21 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1,500 லிட்டா் சாராயம் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், நகரின் பல்வேறு பகுதிகளில் திடீா் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டாா். தொடா்ந்து நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பதிவேடுகளை ஆய்வு செய்த அவா், பணியிலிருந்த காவலா்களிடம் கோப்புகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தினாா்.