கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தல்
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தரங்கம்பாடி வட்டத்தில், நல்லாடை, கீழையூா், கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், வல்லம், முக்கரும்பூா், கஞ்சாநகரம், கீழ்மாத்தூா், நெடுவாசல், இலுப்பூா், ஆக்கூா், மேலப்பெரும்பள்ளம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பாமல், 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் பல நாட்களாக தேங்கியுள்ளன. இந்த நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கால்நடைகள், எலிகள் சேதப்படுத்தி வருவதால் எடை குறைந்து வருகிறது. இதனால் ஏற்படும் இழப்புகளை கொள்முதல் நிலைய பணியாளா்கள் ஏற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லவும், இனி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.