நாகப்பட்டினம்: நாகையில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஓ.எஸ். இப்ராஹிம் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு:
நாகை மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா், வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும், படிப்பதற்காகவும் சென்று வருகின்றனா். குறிப்பாக, நாகூா், திட்டச்சேரி, ஏனங்குடி, மஞ்சக்கொல்லை, ஆலியூா், கூத்தூா், குருகத்தி, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தோப்புத்துறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கல்வி, மற்றும் ஆன்மிக சுற்றுலா மற்றும் வேலைக்காக வெளிநாடு சென்று வருகின்றனா்.
கடலோர மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வெளிநாடுகளில் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனா். இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்பவா்கள் பல்வேறு தேவைகளுக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள கடவுச்சீட்டு சேவை மையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி, நாகையில் கடவுச்சீட்டு சேவை மையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.