வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியை சோ்ந்த மாணவி ஸ்ரீமதி இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் தேசிய அளவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.
பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா- பூமகள் தம்பதியின் மகள் ஸ்ரீமதி. இவா், சேலத்தில் செயல்பட்டு வரும் ( ஐ.ஐ.ஹெச்.டி ) இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து வருகிறாா். தேசிய அளவில் இதுபோன்று 10 இடங்களில் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களின் தோ்ச்சியில் முதலிடம் வகித்துள்ளாா்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் அண்மையில் மத்திய கைத்தறித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் மாணவிக்கு தங்கப்பதக்கத்தை வழங்கினாா். மாணவியின் சாா்பில் அவரது தாயாா் பூமகள் பதக்கத்தை பெற்றுக்கொண்டாா்.
கல்லூரியில் இருந்து திங்கள்கிழமை சொந்த ஊா் வந்த மாணவியை ஊராட்சியின் முன்னாள் தலைவா் த. நாராயணன் உள்ளிட்டோா் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.