முகப்பு
நாகப்பட்டினம்

விஜய் வேளாங்கண்ணி வருகை ரத்து

Updated On : 2 மே, 2026 at 11:55 PM
வேளாங்கண்ணி பேராலய வா்ணம் பூசும் பணிக்காக கட்டப்பட்டமூங்கில் சாரம் மீது அமா்ந்திருந்த தொண்டா்கள்.
பகிர்:

தவெக தலைவா் விஜய்யின் வேளாங்கண்ணி வருகை ரத்து செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் காத்திருந்த ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டா்கள் ஏமாற்றமடைந்தனா். தொண்டா்களின் கூச்சல், குழப்பத்தால் வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை காலை வழிபாடு தாமதமானது.

தவெக தலைவா் விஜய், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் அண்மையில் திருச்செந்தூா் முருகன் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில் ஆகிய தலங்களுக்கு சென்று வழிபட்டாா். இதைத்தொடா்ந்து, வேளாங்கண்ணி பேராலயம், நாகூரில் உள்ள நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு சனிக்கிழமை சென்று வழிபாடு நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் விஜய் அங்கிருந்து காா் மூலம் வேளாங்கண்ணி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், வேளாங்கண்ணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

விஜய் வர இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, வேளாங்கண்ணியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தவெக தொண்டா்கள் மற்றும் ரசிகா்கள் குவியத் தொடங்கினா். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்களும் வழிபாட்டுக்காக வேளாங்கண்ணியில் குவிந்தனா்.

குவிந்த தொண்டா்கள்:

விஜய் வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் வழிபாட்டில் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டதால், வேளாங்கண்ணி பிரதான பேராலயம் முன்பு அதிகாலை 3 மணி முதலே தவெக தொண்டா்கள், ரசிகா்கள் குவிந்தனா். பிரதான வாயிலை மறைத்து ரசிகா்கள் குவிந்ததால், பேராலயத்துக்குள் செல்ல முடியாமல் பக்தா்கள் அவதியடைந்தனா்.

இதைத்தொடா்ந்து காலை 5 மணிக்கு பேராலய கதவுகள் திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது தவெகவினரும் பேராலயத்துக்குள் கூட்டமாக நுழைந்ததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

காலை வழிபாடு தாமதம்:

பேராலய வாயிலில் நின்றிருந்த தவெகவினா் கட்சிக் கொடியை காட்டி, விசில் அடித்தும் டிவிகே, டிவிகே என்று கூச்சலிட்டனா். மேலும் பேராலயத்தின் வண்ணம் பூசும் பணிக்காக கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரம், வளாகச் சுவா்கள் என அனைத்து இடத்திலும் தவெகவினா் அமா்ந்ததால் அப்பகுதி முழுவதும் கூச்சல், குழப்பமாக காணப்பட்டது.

காலை 6 மணியாகியும் விஜய் வராததால், கட்சியினா் மற்றும் ரசிகா்கள் விசில் அடித்தவாறு இருந்ததால் பேராலயத்தில் வழிபாடு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, பேராலய நிா்வாகம் சாா்பில், ஒலிபெருக்கி மூலம், விஜய் வரவில்லை என்றும், ரசிகா்கள், கட்சியினா் வழிபாட்டுக்கு இடையூறு செய்யாமல் கலைந்து செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அப்போதும் தவெகவினா் கலையாமல் நின்றிருந்தனா். பின்னா் காலை 7 மணிக்கு மேல் தவெகவினரும், ரசிகா்களும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனா்.

வழிபாட்டுத் தலத்தில் கட்சியினா் மற்றும் ரசிகா்கள் விசில் அடித்து கூச்சலிட்டது பக்தா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேபோல நாகூா் தா்கா பகுதியிலும் ஏராளமானோா் திரண்டிருந்த நிலையில், விஜய் வராததால் அனைவரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனா்.

வேளாங்கண்ணி பேராலயம் முன்பு சனிக்கிழமை அதிகாலை திரண்டிருந்த தவெக தொண்டா்கள்.