காரைக்கால்

பிப்ரவரி மாதத்தில் அறுவடைக்குத் தயாராகி வரும் சம்பா பயிர்: உரம், பூச்சி மருந்து கிடைக்காமல் விவசாயிகள் அவதி

காரைக்காலில் ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி மாதத்தில் அறுவடைக்குத் தயாராகக்கூடிய நெற்பயிருக்கு, அரசு நிறுவனமான பாசிக்கில் உரிய உரம்

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்காலில் ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி மாதத்தில் அறுவடைக்குத் தயாராகக்கூடிய நெற்பயிருக்கு, அரசு நிறுவனமான பாசிக்கில் உரிய உரம், பூச்சி மருந்து இருப்பில் வைத்து தரப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நிகழாண்டு காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதியான காரைக்கால் வரை முறையாக வந்துசேரவில்லை. ஓரிரு நாளிலேயே நின்றுவிட்டது. காவிரித் தண்ணீரை எதிர்பார்த்து வேளாண் பணியை தொடங்கியவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
காரைக்கால் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் வேளாண் பணி நடைபெறுவதாக வேளாண்  துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஆழ்குழாய் பாசனம், மழையை பயன்படுத்தியே பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது.
குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் வேளாண்மை நடைபெறக்கூடியதாக விளங்கும் திருநள்ளாறு, பேட்டை, செல்லூர், சேத்தூர், நெடுங்காடு, புத்தக்குடி, கோட்டுச்சேரி பகுதியில் மேலவெளி உள்ளிட்ட பகுதிகளில், மேற்சொன்ன நீராதார வசதியைப் பயன்படுத்தியே விவசாயிகள் பயிர் செய்கின்றனர்.
ஒருசில இடங்களில் முன்கூட்டியே தொடங்கிய வேளாண் பணிகளால் தை மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் பயிர் வளர்ச்சியடைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் மழையைப் பயன்படுத்தி செய்தமையால், தற்போது ஆங்காங்கே களையெடுப்புப் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
திருநள்ளாறு அருகே பூமங்களம் பகுதியில் சுமார் 40 ஹெக்டேர் அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தற்போதைய தேவைக்கான உரம், பூச்சி மருந்து, அரசு வேளாண் நிறுவனமான பாசிக்கில் கிடைக்கவில்லை. தமிழகப் பகுதிக்குச் சென்று வாங்கிவர நேரிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பூமங்களம் கிராமத்தில் பயிர் செய்யும் ராமசாமி என்பவர் செவ்வாய்க்கிழமை கூறியது: 140 நாள்கள் கொண்ட சம்பா ரகம் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 80 நாள்கள் கடந்துள்ளது. இந்த பருவத்தில் களையெடுப்பு செய்கிறோம். இந்த தருணத்தில் யூரியா, பொட்டாஷ் உரம் தேவையிருக்கிறது. அரசு நிறுவனமான பாசிக்கில் இவை கிடைக்கவில்லை. தேவை கொஞ்சமாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் தமிழகப் பகுதிக்குச் சென்று வாங்கி வருகிறோம். செலவு அதிகரிக்கிறது. தண்ணீர் குறித்த நேரத்தில் வரவில்லை என்ற நிலையில், கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது, விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளூர் உழவரகத்திலேயே கிடைத்தால் சிறப்பாக இருக்கும். இந்த நிலை காரைக்காலில் இல்லை என வேதனை தெரிவித்தார்.
பாசிக் துணைப் பொதுமேலாளர் (பொ) ஆர். செந்தில்குமார் கூறியது: தேவையான உரங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்குள் வந்துவிடும் என்றார்.
பாசிக் நிறுவன ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, காரைக்காலில் 10 பாசிக் உழவரகங்கள் உள்ளன. வேப்பம் புண்ணாக்கு, நுண்ணூட்ட உரம் ஆகியவையே கையிருப்பில் உள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான உரம் கையிருப்பில் இல்லை. 
அரசின் நிதி நிலை மோசத்தால், பாசிக் மூலம் விவசாயிகளுக்குத் தேவையானதை வழங்க முடியாமல் உள்ளோம். காரைக்கால் பாசிக் நிறுவனத்தில் 140 பேர் வரை பணியாற்றுகிறோம். பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. பலகட்டமாக அரசிடம் போராடியும் பயனில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT