காரைக்கால்

நளன் தீர்த்த குளக்கரையில் பக்தர்கள் வசதிக்கான பணிகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளக் கரையில் கட்டப்பட்டுள்ள கடைகள் உள்ளிட்ட பிற வசதிகள் கொண்ட திட்டப் பணிகளை அரசு நிர்வாகத்தினர்

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளக் கரையில் கட்டப்பட்டுள்ள கடைகள் உள்ளிட்ட பிற வசதிகள் கொண்ட திட்டப் பணிகளை அரசு நிர்வாகத்தினர் விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்; திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் சாலையை செப்பனிட விரைவு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த 2014 -ஆம் ஆண்டு இறுதியில் நளன்  குளம் பகுதியில் ரூ. 3.96 கோடியில் வணிக வளாகம், பொருள்கள் பாதுகாப்பகம், கழிப்பறை, உடைமாற்றும் அறை உள்ளிட்ட வளாகம் கட்டப்பட்டது. இதில் கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்தன.  கடைகள் உள்ளிட்ட மற்ற வசதிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், நளன் குளத்தின் கிழக்குப் புறத்தில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ. 4  கோடி திட்டத்தில் கூடுதலாக 15 கடைகள் கொண்ட வளாகம், 2 ரெஸ்டாரண்ட், அருங்காட்சியகம், தகவல் மையம் ஆகியவை கட்டுமானப் பணி நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த மே மாதம் அரசால் திறக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. 
கடைகள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிய நிலையிலேயே உள்ளதால், நளன் குளத்தில் நீராடும் பக்தர்கள் வாங்கக்கூடிய பொருள்களுக்கான கடைகளை, நடைபாதையிலேயே வைத்து நடத்துகின்றனர். இது திரளான பக்தர்கள் வரக்கூடிய சமயத்தில் கடும் நெரிசலை ஏற்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.
குறிப்பாக கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக நளன் தீர்த்தக் குளத்துக்கு பக்தர்கள் செல்கின்றனர். இவர்கள் வரிசை வளாகம் எங்கு உள்ளது, கட்டண தரிசன வழி எங்கு உள்ளது, பிற தீர்த்தங்கள் எங்கு இருக்கின்றன, வழிபாடு செய்யும் முறை போன்ற தகவல்களை தனியாரிடம் தெரிந்துகொள்ள நேரிடுகிறது. இதுகுறித்து முழு விவரங்களைத் தெரிவிக்கும் நோக்கில் தகவல் மையம் மேற்கண்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பக்தர்கள் எளிதாக தகவல்களைப் பெற்று அதன்மூலம் செயல்படுவர்.
வருகிற டிச. 19 -ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் வருவர். விழா முடிந்து சுமார் 2 மாதங்கள் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு லட்சத்துக்கும் மிகுதியான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். பெரும்பாலானோர் நளன் குளத்துக்குச் செல்லும்போது நெரிசல் மிகுதியாக இருக்கும்பட்சத்தில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே, நளன் குளக்கரையில் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள கடைகளையும், புதிதாக திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் கடைகள், ரெஸ்டாரண்டுடன் கூடிய வளாகத்தையும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
நளன் குளத்திலிருந்து வரிசை வளாகம் செல்லும் தெருவில் ஆக்கிரமிப்புகளின்றி சாலையை சுத்தம் செய்வதோடு, செப்பனிடும் பணியையும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
நளன் குளத்திலிருந்து வரிசை வளாகம் செல்லும் சாலையின் இருபுறங்களும் அன்னதானத்துக்கு உணவுப் பொட்டலம் விற்பனை செய்யும் மையங்கள் உள்ளன. பிச்சைக்காரர்களின்  செயல்பாடுகளால் பக்தர்கள் வெறுப்படையும் நிலை உள்ளது. இதை காவல்துறையினர் முறைப்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
கடை உள்ளிட்ட வளாகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நிர்வகிப்போருக்கு உரிய வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். கோயில் நிர்வாகமா, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகாமா, கோயில் நகரத் திட்ட அலுவலகமா என எந்த நிர்வாகம் இவற்றை நிர்வகிக்க வேண்டும் என்பதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தீர்மானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
சாலை சீர்கேடு :  திருநள்ளாறு கோயிலைச் சுற்றியிருக்கும் நான்கு வீதிகளின் சாலையும் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை தாற்காலிக சீரமைப்பு முறையில் செப்பனிட ஏற்பாடு செய்ய வேண்டும். திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான 6 கி.மீ. பிரதான சாலை சுமார் 15 ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. விபத்தை ஏற்படுத்தும் வகையிலான தரத்தில் பள்ளம், படுகுழிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த சாலையை ரூ. 11 கோடியில் அகலப்படுத்தி மேம்படுத்த டெண்டர் விடப்பட்டிருந்தாலும், இந்த பணிகள் ஜனவரி மாதமே தொடங்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சனிப்பெயர்ச்சி விழாவுக்கு கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக இந்த சாலையில் வருவோர் ஏராளம். எனவே, இந்த சாலையை தாற்காலிகமாக செப்பனிட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட சார்பு ஆட்சியரும், கோயில்  நிர்வாக அதிகாரி பொறுப்பு வகிக்கும் விக்ராந்த் ராஜா புதன்கிழமை கூறும்போது, சனிப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்துக்குப் பின் சனிப்பெயர்ச்சி விழா தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.புதுச்சேரி பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் (பொ) வி. சண்முகசுந்தரம் கூறும்போது,  மழை ஓய்ந்த பின்னர்  திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணியை தொடங்கி விடுவோம். சனிப்பெயர்ச்சிக்குள் இந்த சாலையை தாற்காலிக சீரமைப்பை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறும்போது, நளன் குளக்கரையில் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கக்கூடிய கடைகள், வளாகம் உள்ளிட்டவற்றை சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாகவே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நளன் தீர்த்தக் குளத்துக்குச் செல்கிறார்கள் என்பதால், இந்த பகுதியை மேம்படுத்துவதோடு, இந்த பகுதியில் பக்தர்கள் வசதிக்காக செயல்படுத்தியிருக்கும் திட்டப் பணிகளை முழுமையாக பக்தர்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக, திருநள்ளாறு கோயிலுக்கு முதல் முறையாக ஐ.ஏ.எஸ். அலுவலர் நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றிருப்பதன் மூலம் பல்வேறு குறைபாடுகளை அவர் களைவார் என பெரும்பான்மையினர் நம்பியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT