காரைக்கால் கடலில் மூழ்கி உயிரிழப்பு சம்பவம் தொடர்வதால், பொதுமக்களிடையே கடல் ஆபத்தை தெரிவிக்கும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
2004 சுனாமிக்குப் பிறகும், காரைக்காலில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்ட பிறகும் கடற்கரையின் தன்மை மாறியுள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் மற்றும் அலையைப் பார்த்தது உற்சாகத்துடன் குளிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
அவ்வாறு குளிப்பவர்கள் கடலின் ஆழத்தையும், அதன் ஆபத்தையும் அறிவதில்லை. கரையிலிருந்து சிறிது தூரத்தில் மட்டுமே குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் சிலர் பொருட்படுத்தாமல் ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கின்றனர். இதனால் அவ்வப்போது கடல் அலையில் கிக்கி துரதிருஷ்டவசமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 2011 டிசம்பரில் ஒரே வாரத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்நிலை ஆண்டுதோறும் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் தொடர்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக காவல்துறை தகவல் தெரிவிக்கிறது. 2017 ஜனவரியில் கடலில் குளித்த இளைஞர்கள் 2 பேர் அலையில் சிக்கியபோது, காரைக்கால் தீயணைப்பு வீரர் ஒருவர் அவர்களைக் காப்பாற்றி விட்டு, எதிர்பாராவிதமாக அவர் (தீயணைப்பு வீரர்) அலையில் சிக்கி உயிரிழந்தார். அண்மையில் நாகப்பட்டினம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் காரைக்கால் கடலில் குளித்தனர். அவர்களில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
இவ்வாறு காரைக்காலில் பொதுமக்கள் அதிகமாக பொழுதுபோக்குக்காக திரளக்கூடிய கடற்கரைப் பகுதியிலேயே, இந்த விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற விபத்துகள் தொடர்வதற்கு மது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடற்கரையில் அரசு சார்பில் ஒரு மதுக்கடை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையொட்டி, பல கடைகள் கடற்கரைக்கு மாற்றப்பட்டுவிட்டன.
வெளியூரிலிருந்து வரும் சிலர், மதுக்கடைக்குச் சென்று மது குடித்துவிட்டு கடலில் இறங்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடற்கரையில் ஓரிரண்டு இடங்களில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டிருந்தாலும், அவை காற்றில் கிழிந்தும், அடியோடு சாய்ந்த நிலையிலும் உள்ளன.
விழிப்புணர்வு அவசியம் : 21 கிலோ மீட்டர் நீளம் உள்ள காரைக்கால் கடற்கரையில் 24 மணிநேரக் கண்காணிப்பு என்பது சாத்தியமில்லாதது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கடற்கரை மதுக்கடை வளாகத்திலிலும் கடல் பாதிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் அதிகம் வைக்க வேண்டும். காரைக்கால் நகரின் முக்கிய இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்பாடுகள் மேற்கொள்ளலாம்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏ.எம். இஸ்மாயில் கூறியது: முகத்துவாரத்தில் கருங்கல் மீது நடந்து முகப்பு வரை செல்வோரை தடுக்க, தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். கடற்கரையில் ஒளிரும் வசதியில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டும். விழிப்புணர்வு சம்பந்தமான திட்டப் பணிகளுக்கு, காரைக்காலில் உள்ள துறைமுகம் போன்ற பெரிய தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட உதவியை மாவட்ட நிர்வாகம் பெற்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.