காரைக்கால்

அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு செய்து பல ஆண்டுகள் கடந்தும், கிடப்பில் போடப்பட்டுள்ள காரைக்கால்- பேரளம் அகல ரயில் பாதைத் திட்டத்தை

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு செய்து பல ஆண்டுகள் கடந்தும், கிடப்பில் போடப்பட்டுள்ள காரைக்கால்- பேரளம் அகல ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் இருந்தபோது, ஆங்கிலேயர்கள் வசம் இருந்த தமிழகப் பகுதியான பேரளம் வரை காரைக்காலில் இருந்து ரயில் போக்குவரத்து 1956-க்கு பிற்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டது.
அப்போது முதல், காரைக்காலிலிருந்து பேரளம் வழியாக மயிலாடுதுறை, சென்னைக்கு 1980-ஆம் ஆண்டு வரை ரயில் போக்குவரத்து இருந்தது. என்ன காரணத்தினாலோ இந்த ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர், ரயில்பாதையில் இருந்த தண்டவாளம் அகற்றப்பட்டு, நிலம் மட்டும் ரயில்வே வசம் தற்போது வரை உள்ளது.
காரைக்காலில் இருந்து பேரளம், மயிலாடுதுறை மற்றும் சென்னை செல்ல இந்த மார்க்கமே குறுகிய நேரத்தை தரக்கூடியது என்பதால் காரைக்கால்- பேரளம் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, காரைக்காலில் இருந்து பேரளம் வரையிலான ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் வகையில், கடந்த 2013-14 ஆம் ஆண்டு (சுமார் ரூ.150 கோடி திட்டம்) ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு செய்தது.  இந்த திட்டத்துக்காக முதல்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பணியை தொடராமல் கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில்,  காரைக்கால் முதல் பேரளம் மார்க்கத்தில் முதல்கட்டமாக திருநள்ளாறு வரையிலான 5 கி.மீட்டர் தூரத்தில் அகல ரயில்பாதை அமைத்து, போக்குவரத்தை தொடங்கவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால்  நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் ரயில் மூலம் பக்தர்கள் திருநள்ளாறு வந்தடைய வாய்ப்பு உருவாகும். 
பின்னர்  2-ஆம் கட்ட பணியாக திருநள்ளாறிலிருந்து பேரளம் இணைப்பை செய்யலாம் எனவும் வர்த்தகர்கள், பொதுநல அமைப்பினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து  காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலர் ஜெ.சிவகணேஷ் கூறியது:
காரைக்கால் - பேரளம் இணைப்பு என்பது மிக முக்கியமான திட்டமாகும். புது தில்லியிலிருந்தும், பிற வட மாநிலங்களில் இருந்தும் திருநள்ளாறுக்கு பக்தர்கள் வருகிறார்கள். காரைக்கால் வர்த்தகர்கள் சென்னை உள்ளிட்ட பகுதிக்கு வணிக ரீதியில் சென்று திரும்ப இந்த மார்க்கம் முக்கியமானது.  இவற்றையெல்லாம் விளக்கிக் கூறியும் மத்திய அரசு, இந்த திட்டப்பணியை தொடங்க முயற்சிக்காதது வேதனையளிக்கிறது. தெற்கு ரயில்வே இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். 
புதுச்சேரி மாநிலத்திலிருந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இருவரும், மாநில முதல்வர் வி. நாராயணசாமியும் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, இந்த திட்டப்பணியை குறித்த காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியது:  இந்த திட்டப்பணியை விரைவாக தொடங்கவேண்டியதன் அவசியம் குறித்து, முதல்வர், துணை நிலை ஆளுநருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கவனப்படுத்தப்பட்டுள்ளது. 
பல்வேறு நிலை ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டதாக ரயில்வே போர்டு தெரிவிக்கிறது. எனினும், ரயில்பாதை அமைக்கும் பணியை விரைவாக தொடங்க மாவட்ட நிர்வாகம் உரிய முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார்.
மத்திய அரசு, புதுச்சேரிக்கு நிதியுதவி செய்ய முன்வருவதில்லை என முதல்வர் நாராயணசாமி கூறிவரும் வேளையில், இந்த திட்டத்துக்கு அதிக நிதி தேவையிருப்பதால், மத்திய அரசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி முறையாக அணுகி, திட்டப்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  
ஆய்வுகள் நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற கிடப்பில் போடப்பட்ட பெரிய திட்டங்களை மத்திய அரசால் நடைமுறைப்படுத்த அவர் முனைப்பு காட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT