காரைக்கால்

நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா

DIN

காரைக்காலில் 5 நாள்கள் நடைபெறக்கூடிய தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, பாரம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நகராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க நிகழ்ச்சிகள் பிப்ரவரி 11 முதல் 15-ஆம் தேதி வரை ஆட்சியரகம் அருகே உள்ள நகராட்சித் திடலில் நடைபெறுகிறது. இதில் பதிவுபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் அரங்குகள் அமைத்துள்ளனர். 
முதல் நாளான திங்கள்கிழமை சுய உதவிக் குழுவினரால் தயார் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதில் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் எஸ். சித்ரா, குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் (ஓய்வு) பி. கீதா ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் திறமைகள் குறித்தும், சமுதாயத்தில் பெண்கள் வலிமை மிக்க சக்தியாக உருவெடுக்க எந்த வகையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
சுய உதவிக் குழுவினர் அரங்கை முதல் நாளில் சுமார் 300 பேர் பார்வையிட்டு, பொருள்களை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து, 2-ஆம் நாளான  செவ்வாய்க்கிழமை தெருவோர வியாபாரிகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் பங்குபெற்ற சுகாதார மற்றும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.
இதில் தானிய வகையில் தயார் செய்யப்பட்ட சுண்டல் மற்றும் சூப், நெல்லிக்காய் ஊறுகாய், ஐஸ் கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி பி.சத்யா ஆகியோரைக் கொண்ட நடுவர் குழுவினர் சிறந்த உணவுப் பொருள்களைத் தேர்வு செய்தனர். 
இந்த நிகழ்ச்சியில், பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தினமும் மாலை நிகழ்வாக வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT