ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதைத் தவிர்க்க வலியுறுத்தல்
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசுத்துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதைத்
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசுத்துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதைத் தவிர்த்து, வேலையில்லா பிறருக்கு வாய்ப்பு தரவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி பெற்றோர் சங்கத் தலைவர் அ. வின்சென்ட் வெளியிட்ட அறிக்கை விவரம் : காரைக்கால் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் அதிகாரிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் அரசுப்பணி தரப்பட்டுள்ளது. இவர்கள் மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு, அரசுத்துறையில் சிறப்பு அதிகாரி என்ற பெயர்களில் மீண்டும் பணியமர்த்தப்பட்டு மாத ஊதியம் தரப்படுகிறது. புதுச்சேரி அரசின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாக இருக்கும்போது, பல அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியமே இல்லாத நிலையில், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு மாத ஊதியம் வழங்க நிதி கிடைக்கிறது என்பது தெரியவில்லை. எனவே இதுபோன்று ஓய்வுபெற்றவர்களுக்கு அளித்த பணி வாய்ப்பை ரத்து செய்துவிட்டு, படித்த, தகுதியானவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க புதுச்சேரி அரசு முன்வரவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.