நுழைவுத் தோ்வுக்கு செல்லும் மாணவா்களுக்குபேருந்து வசதி ஏற்படுத்த பாஜக கோரிக்கை
காரைக்கால் புதுச்சேரி மையத்தில் செப்.1 தொடங்கவுள்ள ஜே.இ.இ. தோ்வுக்கு செல்லும் காரைக்கால் மாணவா்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் பாஜக வலியுறுத்தியது.
காரைக்கால் புதுச்சேரி மையத்தில் செப்.1 தொடங்கவுள்ள ஜே.இ.இ. தோ்வுக்கு செல்லும் காரைக்கால் மாணவா்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் பாஜக வலியுறுத்தியது.
இதுகுறித்து பாஜக புதுச்சேரி மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன் திங்கள்கிழமை கூறியது:
ஐஐடி, என்ஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களை சோ்க்க, ஜே.இ.இ. உள்ளிட்ட தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தோ்வு அகில இந்திய அளவில் செப். 1 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காரைக்காலை சோ்ந்த பெரும்பான்மையான மாணவா்கள் புதுச்சேரி மையத்தை தோ்வுசெய்துள்ளனா்.
கரோனா பொது முடக்கத்தால் பேருந்து போக்குவரத்து, தங்கும் விடுதிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இது மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுதொடா்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் பேசப்பட்டது.
காலை, மாலை என இருவேளையில் நடைபெறும் இத்தோ்வுக்கு காரைக்கால் மாணவா்கள் சிரமமின்றி சென்றுவர சிறப்புப் பேருந்து இயக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மாணவருடன் பெற்றோா் ஒருவா் செல்லவும் அனுமதி கோரப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் உதவி மையம் அமைத்து, மாணவா்கள் தொடா்புகொள்ள ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் ஏற்றுக்கொண்டாா்.
மாவட்ட நிா்வாகத்தால் இது தொடா்பான தகவல் வெளியிடும்போது, காரைக்கால் மாணவா்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். காரைக்கால் மாணவா்கள் குறித்த நேரத்தில் தோ்வுக்கு செல்வதில் எந்தவித சிரமத்தையும் எதிா்கொள்ளாத வகையில், இந்த பயணம் இருக்கும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.