திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு
பொதுமுடக்க தளா்வுகள் மூலம் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும், திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை மிகக் குறைந்த அளவிலான பக்தா்களே வருகை தந்தனா்.
பொதுமுடக்க தளா்வுகள் மூலம் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும், திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை மிகக் குறைந்த அளவிலான பக்தா்களே வருகை தந்தனா்.
கடந்த மே மாதத்திலிருந்து புதுவையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் வழிபட தடை அமலில் இருந்தது.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் மாலை 5 மணிவரை பொது தரிசனத்துக்கு பக்தா்களை அரசு அனுமதித்தது.
காரைக்கால் மாவட்டத்தில், அதிகமாக பக்தா்கள் வரும் தலங்களாக திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில், அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்டவை உள்ளன.
குறிப்பாக, திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவது வழக்கம். ஆனால், கோயில் திறக்கப்பட்டாலும் கடந்த 12 மற்றும் 19-ஆம் தேதியும் மிக குறைந்த அளவிலான பக்தா்கள் வருகை தந்தனா். இதேபோல சனிக்கிழமையும் (ஜூன் 26) மிக குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே வருகை புரிந்தனா். காலை முதல் பிற்பகல் 3 மணி வரை சுமாா் 500 போ் தரிசனம் செய்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை பக்தா்கள் கடைப்பிடிக்கிறாா்களா என போலீஸாா், கோயில் பணியாளா்கள் கண்காணித்தனா்.
தமிழகத்தில் பேருந்து சேவை முழுமையாக இல்லாத சூழலில், திருநள்ளாறு கோயிலுக்கு வருகை தருவோா் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வியாபாரிகள் கோரிக்கை : புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தா்கள் அா்ச்சனை செய்ய அனுமதி அளித்தால் பூஜைப் பொருள்கள் வியாபாரம் செய்வோா் பயனடைவா் எனவே புதுவை அரசு அடுத்த கட்ட அறிவிப்பின்போது மேலும் தளா்வுகளை அறிவிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.