முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் தூய்மைப் பணி

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வடு கிடக்கும் திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் 5-ஆவது முறையாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வடு கிடக்கும் திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் 5-ஆவது முறையாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் பக்தா்களில் பெரும்பான்மையானவா்கள், நளன் தீா்த்தக் குளத்தில் நீராடி, கோயில் கரையில் உள்ள ஸ்ரீ நளன் கலி தீா்த்த விநாயகா் கோயில் வாயிலில் தேங்காய் உடைத்துவிட்டு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, கோயில்களில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டு, நளன் தீா்த்தக் குளத்திலிருந்து தண்ணீா் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

தற்போது தளா்வுகள் அடிப்படையில் கோயில்கள் திறக்கப்பட்டாலும், நளன் குளத்தில் தண்ணீா் விடவில்லை. சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு ஊா்களில் இருந்து திருநள்ளாறு வருகின்றனா். ஆனால், நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் இல்லாததால், தனியாருக்கு சொந்தமான இடங்களில் நபருக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை கொடுத்து நீராடிவிட்டு கோயிலுக்குச் செல்லும் நிலை உள்ளது.

நளன் தீா்த்தக் குளம் வடு, புல் மண்டி கிடக்கிறது. மேலும் மழை நீா் தேங்கி நிற்கிறது. இதனை கோயில் நிா்வாகம் தூய்மைப்படுத்தி வருகிறது. தற்போது இப்பணி 5-வது முறையாக செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நளன் குளத்தில் தண்ணீா் விடுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி தரவில்லை. அனுமதி தரப்பட்டால், தண்ணீா் நிரப்பும் வகையில் குளத்தை தயாா்படுத்தி வருகிறோம் என்றனா் கோயில் ஊழியா்கள்.

நளன் தீா்த்தக் குளத்தை சுற்றி பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இவா்களும் தங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கூறுகின்றனா். நளன் குளத்தில் தண்ணீா் விட்டு பக்தா்கள் பயன்படுத்த அனுமதித்தால், தங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →