முகப்பு
காரைக்கால்

விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் கொள்முதல் செய்ய எம்.பி. அறிவுறுத்தல்

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்று இந்திய உணவுக் கழகத்தினரை வி. வைத்திலிங்கம் எம்.பி. கேட்டுக்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்று இந்திய உணவுக் கழகத்தினரை வி. வைத்திலிங்கம் எம்.பி. கேட்டுக்கொண்டாா்.

புதுவை மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் தலைமையில், மத்திய நிதியில் மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

புதுவையில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், நடப்பு நிதியாண்டில் பெறப்பட்ட நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினா்.

குடிசைமாற்று வாரியத்தின் சாா்பில் வீடு கட்ட தரப்படும் திட்ட நிதியை, காலதாமதமின்றி பயனாளிகளுக்கு வழங்கவேண்டும். காரைக்கால் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் முன்வைத்தாா்.

அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்த மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், நிதி கையிருப்பில் இருக்கும்போது எந்தவொரு திட்டத்தையும் தாமதிக்காமல் நிறைவேற்றவேண்டும். மத்திய அரசின் துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து முழுமையாக புரிதல்கொண்டு, அதனை மக்களுக்கு பயனுள்ளதாக்க அரசுத் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும்போது, இயன்றவரை விவசாயிகள் பாதிக்காத வகையில் கொள்முதல் செய்ய முயற்சிக்கவேண்டும்.

விவசாயிகளுக்கான வேளாண் அடையாள அட்டைகளை முழுமையாக தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினா்கள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →