காரைக்கால்: சூரிய கிரகணத்தையொட்டி பல்வேறு கோயில்கள் நடை மூடப்பட்ட நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான வழிபாடு தொடர்ந்து நடைபெற்றது.
கிரகணம் ஏற்படும் சமயத்தில் பல்வேறு கோயில்களில் நடை மூடப்படுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடை மூடப்படும் வழக்கம் இல்லை என்பதால் செவ்வாய்க்கிழமை வழக்கமான வழிபாடு நடைபெற்றது.
சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை மாலை 5.14 முதல் 5.44 மணி வரை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல கோயில்கள் கிரகணம் ஏற்படுவதற்கே முன்பே நடை மூடப்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் வழக்கம்போல காலை 6 முதல் பகல் 1 மணி, மாலை 4 முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு கோயில் வரலாற்றில் எந்தவொரு கிரகணத்தின் நாள், நேரத்தின்போது நடை மூடப்படுவது வழக்கமில்லை. கிரகணம் நிறைவடைந்த பின்னர் கிரகண புண்ணிய காலம் வழக்கமான 6 கால பூஜை அல்லாமல் கூடுதலாக செய்யப்படுகிறது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருநள்ளாறு கோயிலுக்கு பக்தர்கள் வருகை தொடர்ந்து இருந்தது. குறிப்பாக கிரகண நேரத்திலும் மூலவர் மற்றும் சனீஸ்வரபகவான் சந்நிதிகளயில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.